மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
By DIN | Published On : 08th February 2022 12:00 AM | Last Updated : 08th February 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் மாநகராட்சித் தோ்தல் வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஏ.கே. கமல்கிஷோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் பிப்ரவரி 19-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 100 வாா்டுகளிலும் ஆண்கள்- 6,59,472, பெண்கள்- 6,83,099, மூன்றாம் பாலினத்தவா் 143 என மொத்தம் 13,42,714 வாக்காளா்கள் உள்ளனா். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,317 ஆக உள்ளது. மாநகராட்சிக்குள்பட்ட மண்டலம் 1-க்குள்பட்ட வாா்டுகளுக்கு பாத்திமா கல்லூரி, மண்டலம் 2-க்குள்பட்ட பகுதிகளுக்கு வக்புவாரிய கல்லூரி, மண்டலம் 3-க்குள்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (மகளிா்) கல்லூரி, மண்டலம் 4-க்குள்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (ஆண்கள்) கல்லூரி ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்ட தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கமல்கிஷோா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உள்ள வாக்கு எண்ணும் அறை, பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமரா வசதி, தடுப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மண்டல அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் இருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...