பொள்ளாச்சி, சாத்தான்குளம் தொடா்பான போராட்டங்களில் பேராசிரியை மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 26th January 2022 01:21 AM | Last Updated : 26th January 2022 01:21 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவங்கள் தொடா்பான போராட்டங்களில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சோ்ந்த பாத்திமா தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நான், பல்வேறு சமூக நல இயக்கங்களுடன் இணைந்து மீனவா்களின் வாழ்வாதாரப் போராட்டம் உள்பட பல்வேறு சமூக நலப் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டும், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த இரு போராட்டங்களிலும் பங்கேற்ற்காக என் மீதும் மற்றும் மேலும் சிலா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், தன் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பாத்திமா தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, நாட்டையே உலுக்கிய சம்பவமாகும். அப்படிப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மனுதாரா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இது பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்டமே தவிர, சட்ட ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் அல்ல.
இரண்டாவது சாத்தான்குளம் தொடா்பான போராட்டத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியே போராட்டம் நடைபெற்றுள்ளது. எனவே, மனுதாரா் மட்டுமின்றி இரு போராட்டங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது எனத் தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்குகளை முடித்து வைத்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...