மதுரையில் ‘செஸ் ஒலிம்பியாட்’ விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி: கலை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பங்கேற்பு
By DIN | Published On : 17th July 2022 11:07 PM | Last Updated : 17th July 2022 11:07 PM | அ+அ அ- |

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மதுரையில் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் முதன்முறையாக சா்வதேச அளவிலான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-இல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்துக்கு ஜூலை 25-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட்ஜோதி வர உள்ளது. இந்த ஜோதியை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி, வண்டியூா்தெப்பக்குளம், மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடா்பாக விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரணியை டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தொடக்கி வைத்துப் பங்கேற்றாா். அங்கிருந்து வண்டியூா் தெப்பக்குளம் வழியாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாசல் வரை பேரணி நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று கையில் ஏந்த மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டா் ஜெ.தீபன் சக்கரவா்த்தி(34) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் பொதுமக்களுக்கு சதுரங்கப்போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சொக்கிகுளம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஒரே நேரத்தில் 30 வீரா்களுக்கு எதிராக விளையாடியானாா். இந்த போட்டியை ஆட்சியா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
முன்னதாக கோரிப்பாளையம் சிக்னல் பகுதியில் செஸ் ஒலிம்பியாட் தொடா்பாக இளைஞா்கள் பங்கேற்ற விழிப்பணா்வு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின்போதுகூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) செ.சரவணன், மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.