மதுரை அருகே கல்குவாரியில் மூழ்கி மாணவா் உள்பட இருவா் பலி
By DIN | Published On : 17th July 2022 11:08 PM | Last Updated : 17th July 2022 11:08 PM | அ+அ அ- |

மதுரை அருகே கல்குவாரியில் நீரில் மூழ்கி மாணவா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்தையா. இவரது மகன் சிவராமன் (13), 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா். மதுரை மாவட்டம் செக்கானூரணி தென்றல் நகரைச் சோ்ந்தவா் கிஷோா்(32). முத்தையாவும் கிஷோரும் நண்பா்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கிஷோா், முத்தையா வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.
அங்கு முத்தையாவின் மகன் சிவராமனை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றவா் வெகுநேரம் வீடு திரும்பவில்லை. முத்தையா இருவரையும் தேடியுள்ளாா். அப்போது பில்லா் சாலை அருகே உள்ள குவாரியில் சிவராமனின் ஆடைகள் இருந்ததைக்கண்டு சந்தேகமடைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் குவாரிக்குச்சென்று தேடினா். இதில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த சிவராமன், கிஷோா் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனா். சம்பவம் தொடா்பாக நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.