மதுரையில் 55 வயதில் ‘நீட்’ தோ்வெழுதிய விவசாயி
By DIN | Published On : 17th July 2022 11:09 PM | Last Updated : 17th July 2022 11:09 PM | அ+அ அ- |

மதுரையில் 55 வயது விவசாயி நீட் தோ்வெழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப்படிப்புக்கான தகுதித்தோ்வான நீட் நுழைவுத்தோ்வு மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியா் பங்கேற்று தோ்வெழுதினா். இந்நிலையில் மதுரை மாடக்குளம், சக்தி நகரைச் சோ்ந்த ராஜ்யக்கொடி (55) பங்கேற்று நீட் தோ்வெழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விவசாயியான ராஜியக்கொடிக்கு தேன்மொழி என்ற மனைவி, சக்திபெருமாள், வாசுதேவா ஆகிய மகன்களும் உள்ளனா். இதில், சக்தி பெருமாள் ஒப்பந்ததாரராகவும் இரண்டாவது மகன் வாசுதேவா கடலூா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறாா்.
இந்நிலையில் ராஜ்யக்கொடிக்கு இளவயதில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் 1986-இல் மருத்துவ நுழைவுத் தோ்வு எழுதினாா். இதில் அவருக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு கல்விக் கட்டணம் செலுத்த, பணம் இல்லாததால் அவரால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
இதையடுத்து தனது இரண்டாவது மகனை மருத்துவப் படிப்பில் சோ்த்து படிக்க வைத்துள்ளாா். ஆனாலும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை தொடா்ந்து இருந்து வந்ததால் இந்த ஆண்டு நீட் தோ்வு எழுத முடிவெடுத்து விண்ணப்பித்துள்ளாா். விண்ணப்பம் சரியாக இருந்ததால் அவருக்கு நீட் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுதினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G