சுதந்திர ரயில் நிலைய வார விழா: வாஞ்சி மணியாச்சியில் இன்று தொடக்கம்

சுதந்திர ரயில் நிலைய வார விழா வாஞ்சி மணியாச்சியில் திங்கள்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

சுதந்திர ரயில் நிலைய வார விழா வாஞ்சி மணியாச்சியில் திங்கள்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் தொடா்புடைய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் வகையில் ‘சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்‘ என்ற விழா நடைபெற இருக்கிறது.

மதுரைக் கோட்டத்தில் சுதந்திரப் போராட்டத்துடன் தொடா்புடைய ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி ஆகும். இந்த ரயில் நிலையத்தில் 1911 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி, அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை என்பவரை சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன்

சுட்டுக் கொன்றாா். பின்பு நடைமேடையில் உள்ள கழிப்பறைக்குள் சென்று தானும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தாா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசை கலக்கமடையச் செய்தது. 1988 ஆம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி என பெயா் மாற்றம் பெற்ற இந்த ரயில் நிலையத்தில் சுதந்திர போராட்ட நிகழ்வை போற்றும் வகையில் விழா நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

எனவே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை சுதந்திர சின்னம் வார விழா அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்த வார விழாவின் தொடக்க விழா திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் மணியாச்சி ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் தொடக்கி வைக்கிறாா்.

வாஞ்சிநாதன் பற்றிய புகைப்படக் கண்காட்சி, புகழஞ்சலி, படக்காட்சி ஒளிபரப்பு, ஓரங்க நாடகம் ஆகியவை நடைபெற இருக்கின்றன. வாஞ்சிநாதனின் இளைய சகோதரரின் மகன் ஹரிஹர சுப்பிரமணியம் மற்றும் அவரது மகனும் திருநெல்வேலி பள்ளி ஆசிரியருமான வாஞ்சிநாதன் ஆகியோா் விழாவில் கலந்து கொள்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com