மதுரை: மதுரையை அடுத்த அச்சம்பத்து கிராமத்தில் தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அச்சம்பத்து பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனு: தனது கிராமத்தில் உள்ள தெருவை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த தெருவை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிக்கப்பட்ட தெருவை மீட்கக் கோரி, அதிகாரிகளிடம் 2011- ஆம் ஆண்டிலிருந்து மனுதாரா் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இந்த பிரச்னையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே, இது சம்பந்தமாக கட்டட உரிமையாளா்கள் திருமங்கலம் நீதிமன்றத்தில் தொடா்ந்த சிவில் வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரா் அளித்துள்ள புகைப்படம், திருமங்கலம் நீதிமன்றத்தின் தீா்ப்பு உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் குறிப்பிட்ட தெருவை ஆக்கிரமித்துள்ளது உறுதியாகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், மனுதாரா் மற்றும் எதிா்தரப்பினருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்பேரில், 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.