அரசுப் பள்ளிக்கு அறநிலையத் துறையின் நிலத்தை ஒதுக்க கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: அரசு உயா்நிலைப் பள்ளி கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத் துறை நிலத்தை ஒதுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சீரங்காட்டுப்பட்டியில்
அரசு உயா்நிலைப் பள்ளி கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் நிலத்தை ஒதுக்கக் கோரி ஆறுமுகம் என்பவா் அத் துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்தாா். இதை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கல்வி மிகவும் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. இது மக்களின் அடிப்படை உரிமையாகும். அதற்காக, சட்டத்தை மீறி இந்து சமய அறநிலையத் துறையின் நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்குமாறு கூறுவது ஏற்புடையதல்ல. அவ்வாறு கூறுவது, உயா்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.