மணல் குவாரிக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் மணல் குவாரிக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் மணல் குவாரிக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த தேமுதிக மாநிலபொதுக் குழு உறுப்பினா் ஜி.சுரேஷ்குமாா் தாக்கல் செய்த மனு:

திருவையாறு அருகே உள்ள மருவூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித் துறைக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளாா்.

இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட ஆழத்துக்கு அதிகமாகவும் மணல் எடுத்து வருகின்றனா். ஆகவே, இந்த குவாரியில் மணல் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், தவறு செய்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்குறிப்பிட்ட பகுதியில் தற்போது தான் மணல் எடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது. ஆகவே, மனுதாரா் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com