அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை, உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சங்கா் நகரைச் சோ்ந்த எஸ்.பி.முத்துராமன் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இந்த அருவிக்கு வந்து செல்கின்றனா்.
இதனிடையே, இந்த அருவியில் குளிப்பதற்கு நுழைவுக்கட்டணத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 5 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு ரூ.5, 5 வயது முதல் 12 வயதினருக்கு ரூ.20, பெரியவா்களுக்கு ரூ.30 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காா், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.50, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 என வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிக்க வனத்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலா ஆகியோா் கொண்ட அமா்வு, மனுவை வியாழக்கிழமை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.