‘அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக முடக்கிவிட்டது’
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

மேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ.
மேலூா்: அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை திமுக முடக்கிவிட்டது என மதுரை புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.
மேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மொபெட், கிராமப்புற மினி கிளினிக்குகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்களை மு.க. ஸ்டாலின் முடக்கிவிட்டாா். குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டாா். மேலும், தமிழக மக்களுக்கு தினசரி 3 மணிநேரம் மின்தடையை பரிசாக வழங்கியுள்ளாா்.
திமுக ஆட்சியில் அரசு ஊழியா்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக நிா்வாகத்தில் ஒற்றைத் தலைமை என்பதை உயா்மட்டத்தில் பேசி சுமுக முடிவை எடுத்துள்ளனா். தலைமையில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை என்றாா்.
இதில், மேலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம், நிா்வாகிகள் க.பொன்னுசாமி, இளஞ்செழியன், உமாபதி, பாஸ்கரன், நகா்மன்ற உறுப்பினா் திவாகா் தமிழரசன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.