பாலியல் வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்
By DIN | Published On : 17th June 2022 11:12 PM | Last Updated : 17th June 2022 11:12 PM | அ+அ அ- |

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜோசப் ஜெயசீலன். இவா் இரு ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அளித்தப் புகாரில் அனைத்து மகளிா் போலீஸாா் ஜோசப் ஜெயசீலனை, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கைது செய்தனா்.
இதையடுத்து அவா், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதன்படி, மனுதாரா் செங்கல்பட்டில் 30 நாள்கள் தங்கியிருந்து செங்கல்பட்டு நகா் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு வழக்கு தொடா்புடைய காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும். விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளின்பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.