மதுரை ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 45 கடைகளுக்கு போலீஸாா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
மதுரை ஊரகப்பகுதிகளில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 45 கடைக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க 45 கடைகளுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஊரகக்காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா். இதன்படி மதுரை ஊரகக் காவல் துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளில் உள்ள 45 கடைகளுக்கு சீல் வைத்தனா்