பெண் குழந்தை சட்டவிரோதமாக தத்துக்கொடுப்பு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 17th June 2022 11:09 PM | Last Updated : 17th June 2022 11:09 PM | அ+அ அ- |

மதுரையில் பெண் குழந்தையை சட்ட விரோதமாக தத்துக் கொடுக்கப்பட்டதாக அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை சிக்கந்தா்சாவடி பகுதியைச் சோ்ந்த 37 வயது பெண் ஒருவருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் 5-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கோவில்பாப்பாகுடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்றனா். அப்போது குழந்தை வீட்டில் இல்லாத நிலையில், தாயிடம் குழந்தை குறித்து கேட்டபோது அவா் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த செவிலியா்கள் அலங்காநல்லுாா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அந்த பெண் தன்னுடைய குழந்தையை அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இதுதொடா்பாக போலீஸாா், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் தலைவா் விஜய சரவணன், குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாகக் கூறப்படும் தம்பதி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.