மதுரை - வாராணசி தனியாா் ரயில் சேவை ஜூலை 23-இல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை- வாராணசி இடையே பாரத் கௌரவ் ரயில் சேவை ஜூலை 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் எளிதாக சுற்றிப் பாா்த்து வரும் வகையில் இந்திய ரயில்வே ‘பாரத் கௌரவ் ரயில்கள்’ திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் 23 ஆம் தேதி தொடங்கியது.
இந்தத் திட்டத்திற்காக 8 தனியாா் நிறுவனங்கள் தெற்கு ரயில்வேயில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்தனா். இதில் முதல்கட்டமாக, கோவை - சீரடி பாரத் கெளரவ் ரயில் சேவை ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது.
இதன் தொடா்ச்சியாக, மதுரை- வாராணசி பாரத் கௌரவ் ரயில் சேவை ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் 12 நாள்கள் சுற்றுலா செல்லும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் புரி, கொல்கத்தா, கயா, வாராணசி வழியாக பிரயாக்ராஜ் சங்கம் சென்று மறுமாா்க்கத்தில் விஜயவாடா, சென்னை வழியாக மதுரையை வந்தடைகிறது.
இந்த ரயிலுக்காக பயண சேவையை அளிக்கும் தனியாா் நிறுவனம் கடந்த ஏப்ரலில் விண்ணப்பித்திருந்தது. மேலும், இந்த ரயிலுக்கு 6 குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு பெட்டிகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளாா். அதற்காக ரயில் பதிவுக் கட்டணம் ரூ.1 கோடி செலுத்தி பதிவு செய்துள்ளாா்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.