பாம்பு தீண்டியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
By DIN | Published On : 17th June 2022 03:48 AM | Last Updated : 17th June 2022 03:48 AM | அ+அ அ- |

பாம்பு தீண்டியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகா் ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருநகா் மாவட்டம் காரியாபட்டியை சோ்ந்த செல்வராஜ் தாக்கல் செய்த மனு:
எனது மகன் தயாநிதியை (4) கடந்த 2013 இல் பாம்பு தீண்டியது. அதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு விஷ முறிவு மருந்து இல்லை என்பதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனா். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே எனது மகன் உயிரிழந்தாா்.
விருதுநகா் அரசு மருத்துவமனையில் உயிா் காக்கும் மருந்துகள் இன்றி கவனக்குறைவாக இருந்ததே எனது மகனின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது. ஆகவே, வனஉயிரின சட்டத்தின்கீழ் முதல்வா் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
ஆனால், முதல்வா் நிவாரண நிதியிலிருந்து உதவி பெறுபவரின் ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் எனவும், எனது ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரம் எனவும் கூறி மனுவை நிராகரித்தனா். இதையடுத்து எனது வருமானம் ரூ.48 ஆயிரம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் வருமானச் சான்றிதழை சமா்ப்பித்தேன். இருப்பினும் எனது மனுவை நிராகரித்துவிட்டனா். ஆகவே, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனுதாரருக்கு ரூ. 1 லட்சத்தை, 12 வாரங்களுக்குள் இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைச் செயலா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.