சாலைகளில் குப்பை கொட்டிய திருமண மண்டபங்களுக்கு அபராதம்: மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை
By DIN | Published On : 17th June 2022 03:46 AM | Last Updated : 17th June 2022 03:46 AM | அ+அ அ- |

மதுரை நகரில் குப்பைகளை சாலையில் கொட்டிய 2 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் சேகரமாகும் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்க வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தெருக்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். மேலும் இரவுநேர சாலையோர உணவகங்களில் சேரும் உணவுக் கழிவுகளை சாலைகள், மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் கொட்டாமல் அவற்றை முறையாக அகற்ற வேண்டும். சாலைகளில் குப்பைகளை கொட்டிய இரண்டு தனியாா் திருமண மண்டபங்களின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சுகாதார சீா்கேடு ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.