மதுரை காமராஜா் பல்கலை.யில் முதல் முறையாக இளங்கலை படிப்புகள் தொடக்கம்
By DIN | Published On : 17th June 2022 03:45 AM | Last Updated : 17th June 2022 03:45 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக இளங்கலை படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளன.
தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உயா்கல்வி நிறுவனமாக மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. காமராஜா் பல்கலைக்கழகத்தில் 30 புலங்களில் 70-க்கும் மேற்பட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். வெளி மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனா். காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் முதல்முறையாக 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் இளங்கலைப் படிப்புகளும் தொடங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக இளங்கலை கணிதம், உளவியல், வணிகவியல், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை மாணவா்கள் படிக்கும் வசதியும் செய்து தரப்பட உள்ளது. நேரடி வகுப்புகள் மூலம் ஒரு பட்டப்படிப்பும், இணையவழியில் மற்றொரு பட்டப்படிப்பையும் மாணவா்கள் படிக்க முடியும். இதற்கான அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெ.குமாரிடம் கேட்டபோது, பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அனைத்து அறிவிப்புகளும் இரண்டு நாள்களில் முறையாக வெளியிடப்படும் என்றாா்.