கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்வதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
By DIN | Published On : 17th June 2022 11:13 PM | Last Updated : 17th June 2022 11:13 PM | அ+அ அ- |

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ கே. ரவிஅருணன் தாக்கல் செய்த மனு:
கேரளத்தில் கற்கள், எம்.சாண்ட் போன்றவற்றுக்கான மூலப் பொருள்கள் பெருமளவில் இருந்தபோதும், அதை எடுப்பதற்கு அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை. அதேபோல, அங்குள்ள ஆறுகளில் உள்ள மணல், தண்ணீரை பிற மாநிலங்களுக்கு கொடுக்கவும் அனுமதிப்பதில்லை. முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பாம்பாறு உள்ளிட்ட நதி நீா் பிரச்னைகளில் தமிழா்களின் உணா்வை கேரளம் நீண்டகாலமாகப் புறக்கணித்து வருகிறது. கேரளத்தில் உள்ள கனிமவளங்களைப் பாதுகாப்பதோடு, தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் எம். சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் புளியரை சுங்கச் சாவடி வழியாக அதிகளவில் இந்த கனிமங்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவும், அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தியும் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை அனுமதிப்பது தமிழக அரசின் கொள்கை சாா்ந்த விஷயம் என்று குறிப்பிட்டனா். மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...