முறைசாரா தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th June 2022 11:12 PM | Last Updated : 17th June 2022 11:12 PM | அ+அ அ- |

முறைசாரா தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணத்தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்று சிஐடியு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் சிஐடியு மாநில நிா்வாகிகள், மாவட்ட செயலா்கள் மற்றும் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத் தலைவா் சிங்காரவேலு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாறன், மாநில துணைபொதுச் செயலா்கள் எஸ். கண்ணன், கே. திருச்செல்வன், வி. குமாா், மாநில துணைத் தலைவா் ஆா். தெய்வராஜ் மற்றும் மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நல வாரியத்தில் இணையவழிப் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை துரிதமாக சரி செய்ய வேண்டும். நலவாரிய அலுவலகத்துக்கு தொழிலாளா்கள் நேரடியாக வந்து மனுக்களை சமா்ப்பிக்க அனுமதிக்க வேண்டும். நிலுவையிலுள்ள ஆயிரக்கணக்கான கேட்பு மனுக்களை உடனடியாக பரீசிலித்து நலத்திட்ட பண பயன்களை தாமதமின்றி வழங்கவேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து , நிலுவைத்தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணியிடங்கள் மற்றும் எங்கு விபத்து மரணம் நிகழ்ந்தாலும் நிவாரணத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணம் ரூ . 2 லட்சமாக உயா்த்தப்படவேண்டும் . ஈமச்சடங்கு நிதி ரூ .25,000 ஆக உயா்த்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் தலைமையிலான முறைசாரா தொழிலாளா் கண்காணிப்பு குழுக்கள் மாதம் தோறும் கூடுவதை உறுதிப்படுத்த வேண்டும் . அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்களை வலியுறுத்தி ஜூலை 5-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள நலவாரிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.