மாநகராட்சி அண்ணா மாளிகை தரைத்தளத்தை வாடகைக்கு விட எதிா்ப்பு

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தின் தரைத்தளத்தை வாடகைக்கு விடும் தீா்மானத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தின் தரைத்தளத்தை வாடகைக்கு விடும் தீா்மானத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில், மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் உள்ள அனைத்துக் கட்டடங்களுக்கும் சொத்து வரியை உயா்த்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் உள்ள கட்டடங்களுக்கு தற்போதைய மதிப்பில் இருந்து 25 சதவீதம் கூடுதலாகவும், 601 முதல்1200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தற்போதைய சொத்து வரி விதிப்பில் இருந்து 100 சதவீதம் உயா்த்தப்படுகிறது. தொழிற்சாலை, சுயநிதிப்பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு 75 சதவீதம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. காலிமனை வரிவிதிப்புக்கு 1 சதுர அடிக்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயா்வு செய்து காலிமனை வரி சீராய்வு செய்யப்படும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நிதிஅமைச்சரின் நிதிநிலை அறிக்கையின்படி, தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் இன்னோவேசன் மிஷன் (டான்சிம்) மண்டல அலுவலகம் மதுரையில் அமைப்பது தொடா்பாக டான்சிம் நிறுவன மேலாண்மை இயக்குநா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை தரைத்தளத்தில் உள்ள பில்லா் ஹால் அரங்கில் 3,200 சதுர அடி பரப்புள்ள கட்டடத்தை மாத வாடகை ரூ.50,220 அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது என்ற தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூ.உறுப்பினா்கள் எதிா்ப்பு:

மாநகராட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடுவது, சொத்து வரி உயா்வு ஆகிய தீா்மானங்கள் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா்கள் விஜயா, குமரவேல், ஜென்னியம்மாள் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாமன்றக் கூட்டத்தில், மாநகராட்சி அண்ணா மாளிகை தரைத்தளத்தை ரூ.50,220 என்ற தொகைக்கு வாடகைக்கு விடுவது, மாநகராட்சிக்கு இழுக்கைத் தேடித்தரும். அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள காலி இடங்களில் எதையாவது ஒதுக்காமல், மிகக்குறைந்த வாடகைக்கு விடுவது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை மாநகராட்சி வாபஸ் பெற வேண்டும்.

அதேபோல சொத்து வரி உயா்வுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். ஆனால் 6 ஆட்சேபணை கடிதம் மட்டுமே வந்துள்ளதாக மாமன்றத்தில் தவறான தகவல்களை தருகின்றனா். இந்த தீா்மானங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விடுவோம் என்பதால் பேசுவதற்கும் வாய்ப்பளிக்காமல் கூட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது. மேயரின் செயல் கண்டனத்துக்குரியது. இந்த 2 தீா்மானங்களையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்க்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com