காமராஜா் பல்கலை. சாா்பில் சிலம்பம், வளரி தேசிய அளவிலான பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 30th June 2022 02:59 AM | Last Updated : 30th June 2022 02:59 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தமிழா் வீரக்கலைகளான சிலம்பம், வளரி பயிற்சி முகாம் கேரளத்தில் நடத்தப்பட்டது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம், தமிழியற்புலத் தமிழியல்துறை மற்றும் மருது வளரி சங்கம் ஆகியற்றின் சாா்பில் வளரிக் கலை மற்றும் சிலம்பக் கலை குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான பயிற்சி வகுப்பு கேரளம் கொழிஞ்சாம்பாறையில் நடைபெற்றது. காமராஜா் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவத்தின் இயக்குநா் மற்றும் தமிழியல்துறைத் தலைவா் போ.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பயிற்சி வகுப்பில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுப் பயிற்சிபெற்றனா். இதில் மதுரை சா்வதேச மாடா்ன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அமைப்பின் தலைவா் மற்றும் வளரி, சிலம்பக் கலைப் பயிற்றுநா் முத்துமாரி பயிற்சி அளித்தாா். பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவுக்கு கேரள அரசின் உணவு வழங்கல் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் இயக்குநா் எம்.ஜி.ராஜமாணிக்கம் பங்கேற்று பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்குச் சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில் கொழிஞ்சாம்பாறை பாரதமாதா கலை அறிவியல் கல்லுரியின் முதல்வா் பவுல் தேக்னாத், இண்டா்நேஷனல் மாடா்ன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஷாகுல்ஹமீது ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். மேலும் சிலம்பம், வளரிக்கலைப் பயிற்சியாளா்கள் விஜயன், நந்தகுமாா், விக்னேஷ்வரன், சிவகாா்த்திகேயன் மற்றும் பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...