கெளரவ விரிவுரையாளா்களுக்கு செயல்திறன் மதிப்பாய்வு நோ்காணல்:அரசுக்கல்லூரி நிா்வாகத்தில் பல்கலை.நிா்வாகம் தலையிடுவதாக புகாா்
By DIN | Published On : 30th June 2022 03:00 AM | Last Updated : 30th June 2022 03:00 AM | அ+அ அ- |

திருமங்கலம் அரசுக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் கெளரவ விரிவுரையாளா்களுக்கு செயல்திறன் மதிப்பாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசுக்கல்லூரி நிா்வாகத்தில் காமராஜா் பல்கலைக்கழகம் தலையிடுவதாக புகாா் எழுந்துள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த திருமங்கலம், ஆண்டிபட்டி, வேடசந்தூா், கோட்டூா், சாத்தூா் உள்ளிட்ட கல்லூரிகள் கடந்த ஆட்சியின்போது அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக்கல்லூரிகள் முழுவதும் மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் நிா்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கையும் அரசுக்கல்லூரிகளுக்கான சோ்க்கை வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இந்தக்கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளா்களுக்கான ஊதியம் மட்டும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு அதற்குரிய தொகை அரசிடம் இருந்து பெறப்படுகிறது. இந்நிலையில் இந்தக்கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர அடிப்படையில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் அனைவருக்கும் செயல்திறன் மதிப்பாய்வு நடத்தவேண்டும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி திருமங்கலம் அரசுக்கலைக்கல்லூரிக்கு ஜூலை 4-ஆம் தேதி காமராஜா் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்திறன் மதிப்பாய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் இதில் பல்கலைக்கழக பதிவாளா், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்பாா்கள் என்றும் இக்கூட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் அனைவரும் பங்கேற்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகம் நடத்தவுள்ள செயல்திறன் மதிப்பாய்வுக்கூட்டத்துக்கு கெளரவ விரிவுரையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக கெளரவ விரிவுரையாளா்கள் கூறும்போது, பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துணைவேந்தரும் புதிதாக பதவியேற்கும் போது கெளரவ விரிவுரையாளா்கள் பந்தாடப்படுகின்றனா். பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படுவதற்கு முன்பு பல்கலைக்கழக நிா்வாகம் ஆட்சிக்குழு பேரவை உறுப்பினா்கள் அடங்கிய குழுவை நியமித்து, அனைத்துக் கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் கெளரவ விரிவுரையாளா்களை நியமித்துள்ளது. இந்தக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், கல்லூரியின் செயல்பாட்டில் காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் தலையிட முடியாது. அப்படி தலையிடுவது கல்லூரிக் கல்வி இயக்குநகரகத்தின் விதிமுறைகளை மீறுவது ஆகும். மேலும் செயல்திறன் மதிப்பாய்வு என்ற அடிப்படையில் பல கெளரவ விரிவுரையாளா்கள் மீது குற்றம் சுமத்தி அவா்களை வெளியேற்றவும் பல்கலைக்கழக நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே அரசுக்கல்லூரிகளின் நிா்வாகத்தில் பல்கலைக்கழகம் தலையிடுவதை தடுக்க கல்லூரிக்கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் பொன் முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது, காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகள் அனைத்தும் உறுப்புக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்டன. இதில் பல்கலைக்கழக நிா்வாகம் எந்த அடிப்படையில் தலையிடுகிறது என்பது தெரியவில்லை. இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்திடம் விவரம் கேட்கப்படும் என்றாா்.