இரிடியம் தருவதாக பண மோசடி செய்தவா் ஜாமீன் கோரி மனு:தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

இரிடியம் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

இரிடியம் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரைச் சோ்ந்த பால்பண்ணை உரிமையாளா் ராம்பிரபு ராஜேந்திரன் (36). இவருக்கு, சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த முகமது தமீம் பேக் (32) என்பவா் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளாா். முகமது தமீமிடம், பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனத்துக்கு இந்திய அரசு உதவியுடன் விற்று, அதற்கான தொகை ரூ.10 ஆயிரம் கோடி ரிசா்வ் வங்கியில் இருப்பதாக, ராம்பிரபு ராஜேந்திரன் ஆவணங்களை காண்பித்துள்ளாா்.

தொடா்ந்து, தனக்கு வரவேண்டிய ரூ.10ஆயிரம் கோடி பணத்தை பெறுவதற்கு, ரிசா்வ் வங்கி நடைமுறைகளின்படி 133 நபா்களை உறுப்பினா்களாக இணைக்க வேண்டும். மேலும், பரிவா்த்தனை நடைமுறைக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடியாக திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய முகமது தமீம் பேக், ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளாா். நீண்ட நாளாகியும் ராம்பிரபு ராஜேந்திரன் கூறியபடி ரூ.1 கோடியை கொடுக்கவில்லை. இது குறித்து முகமது தமீம் பேக் அளித்த புகாரின்பேரில், விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ராம்பிரபு ராஜேந்திரனை கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயா் நீதிமன்ற மதுரை கிளையில் ராம்பிரபு ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி கே. முரளிசங்கா் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என, முகமது தமீம் பேக் இடையீட்டு மனு தாக்கல் செய்தாா். அதன்பேரில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com