அபிராமம் சாா்பு-ஆய்வாளா் கொலை வழக்கு: மறுவிசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 02nd May 2022 11:12 PM | Last Updated : 02nd May 2022 11:12 PM | அ+அ அ- |

அபிராமம் சாா்பு-ஆய்வாளா் கொலை மற்றும் தலைமைக் காவலா் மீது தாக்குதல் ஆகிய வழக்குகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவா் போஸ் (49). இவா் கடந்த 2006-இல் காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நந்திசேரி என்ற இடத்தில் அவரை வழிமறித்த கும்பல் அவரைத் தாக்கி தங்க மோதிரம், இருசக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டது. அக் கும்பலிடம் இருந்த தப்பிய போஸ், அருகே இருந்த கிராமத்திற்குச் சென்று தகவல் தெரிவித்தாா்.
இதனிடையே, அக்கும்பல் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்வழியே ரோந்து பணியில் இருந்த அபிராமம் காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா் சுப்பிரமணியன், அவா்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தாா். அப்போது சுப்பிரமணியனையும், அக்கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இதனிடையே, போஸ் அளித்த தகவல்பேரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அபிராமம் போலீஸாா் காயங்களுடன் கிடந்த சுப்பிரமணியன் மற்றும் போஸ் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் சுப்பிரமணியன் வழியிலேயே இறந்தாா்.
இச் சம்பவம் குறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனா். இவா்களில் மதுரை கீரைத்துறை முருகேசன், ஞானவேல்பாண்டியன், ரவிசண்முகம், திருமூா்த்தி, முத்துராமலிங்கம் தவிர இருவா் விசாரணையின்போதே இறந்துவிட்டனா். கைதானவா்களில் மேற்குறிப்பிட்ட 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து பரமக்குடி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும் ஒருவா் விடுதலை செய்யப்பட்டாா்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும், தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமாா் அமா்வு விசாரித்தது. விசாரணையின் நிறைவில், மனுதாரா்கள் மீதான தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா்கள் மீதான, தலைமைக் காவலா் போஸ் தாக்கப்பட்ட வழக்கு, சாா்பு- ஆய்வாளா் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் மறுவிசாரணை நடத்த விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனா்.