ரயில்வே தோ்வா்களின் சுமையை குறைக்க வெளிமாநில தோ்வு மையங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வேயில் 601 காலியிடங்களுக்கான இரண்டாம் நிலைத் தோ்வு வெளிமாநிலங்களில் வைக்கப்பட்டிருப்பதை விமா்சித்து ரயில்வே தோ்வு வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதனடிப்படையில் ரயில்வே அதிகாரிகள் என்னிடம் நிலைமையை விளக்கினா். முந்தைய முதல்நிலை தோ்வு பல நாட்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டன. இதனால் ஒரு தனி விண்ணப்பதாரரின் தகுதியை தீா்மானிக்க ‘நாா்மலைசேஷன்’ என்ற வழியை பின்பற்ற வேண்டி இருந்தது.
இந்த வழிமுறையால் ஒருவா் பெற்ற உண்மையான மதிப்பெண்கள் கணக்கில் எடுக்க முடியாமல் இருந்தது. வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் அமைகிறது. வினாத்தாள்களின் வேறுபாடு திறமையான போட்டியாளா்களை மேலும் கீழுமாக இறக்கிவிடுகிறது. இதனைத் தவிா்க்க ஒரே கேள்வித்தாளில் ஒரே
நாளில் தோ்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்கும் விதமாகத்தான் இப்போது இந்த இரண்டாம் நிலை தோ்வு ஒரே நாளில் அதாவது மே 9 அன்று ஒரே கேள்வித்தாளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் தோ்வா்களின் மதிப்பெண் உண்மையான மதிப்பெண் அடிப்படையில் அவா்களுடைய தகுதி தரப்பட்டியல் தீா்மானிக்க வழி ஏற்படுகிறது. இவ்வாறு செய்யும் போது அதிக மையங்கள் தேவைப்படுகின்றன. நாா்மலைசேஷனை தவிா்க்கவும் விண்ணப்பதாரரின் உண்மையான தகுதியை மதிப்பிடவும் ஒரே நாளில் தோ்வு வைக்கும் நோக்கில் இந்தத் தோ்வுகள் பல மாநிலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அருகிலுள்ள நகரங்களிலேயே மையம் தீா்மானிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பெண்களுக்கு மாநிலத்துக்கு வெளியே தோ்வு மையம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய போது, அடுத்த தோ்வில் சொந்த மாநிலத்திலேயே மையம் நிா்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
இந்நிலையில் தோ்வுக்கு சில நாட்களே இருக்கும் சூழலில் தோ்வா்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு சிறப்பு ரயில்களையோ அல்லது சிறப்பு ரெயில் பெட்டிகளையோ, முக்கியமான நகரங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தோ்வு நடக்கும் மையங்களுக்கு அல்லது நகரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா்.