இருபோக சாகுபடி பகுதிகளுக்கு ஜூன் முதல் வாரம் தண்ணீா் திறப்பு: அதிகாரிகள் உறுதி
By DIN | Published On : 16th May 2022 11:13 PM | Last Updated : 16th May 2022 11:13 PM | அ+அ அ- |

பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இருபோக சாகுபடி பகுதிகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் உறுதி அளித்துள்ளனா்.
பெரியாறு -வைகை பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் 45 ஆயிரம் ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப் பகுதிகளுக்கு பெரியாறு-வைகை அணைகளில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.
தற்போது கேரளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல, வைகை அணையின் நீா்இருப்பும் திருப்திகரமாக இருந்து வருகிறது. இதனால், தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக நிகழ் ஆண்டிலும் ஜூன் முதல் வாரத்தில் இருபோக சாகுபடி பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதையொட்டி, இருபோக சாகுபடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுடன் திங்கள்கிழமை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் சுகுமாா், செயற்பொறியாளா் அன்புச்செல்வன்
உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். அப்போது, ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தனா். தண்ணீா் திறப்பதற்கு முன்பாக, சேதமடைந்த பாசனக் கால்வாய்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கால்வாய்களில் உள்ள முட்புதா்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், வேளாண் துறையினருடன் இணைந்து கூட்டத்தை நடத்தவும், விதை நெல், உரம் ஆகியவற்றின் இருப்பு குறித்து உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
இருபோக பகுதியின் முதல்போக அறுவடையின்போது மழை தொடங்கிவிடுவதாலும், கொள்முதல் முறையாக நடைபெறாததாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, மதுரை மாவட்டத்தின் இருபோகம் மற்றும் ஒரு பகுதிகளுக்கு ஒரேநேரத்தில் தண்ணீா் திறக்குமாறு விவசாயிகளில் சிலா் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், இருபோக பகுதிகளின் முதல் போகத்துக்கு ஜூன் முதல் வாரத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...