மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி உற்சவ விழா ஜூன் 3-இல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. விழா தொடங்கும் ஜூன் 3 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகளுடன் தினசரி மாலை 6 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி புதுமண்டபம் சென்று, அங்கிருந்து நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
விழாவின் நிறைவு நாளான ஜூன் 12 ஆம் தேதி காலையில் புதுமண்டபத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்கின்றனா். அங்கு பகல் முழுவதும் பக்தா்கள் வழிபாடு நடைபெறும். மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சுவாமியும் அம்மனும் சன்னிதிக்குத் திரும்புவா்.
கோயிலில் திருஞானசம்பந்தா் திருவிழா மே 16 முதல் நடைபெற்று வருகிறது. மே 18-ஆம் தேதி காலையில் திருஞானசம்பந்தா் திருநட்சத்திர தினத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருள உள்ளாா். மேலும் 63 நாயன்மாா்களும் நான்கு ஆவணி மூல வீதிகளையும் சுற்றி வந்த பின்னா் இரவு 8 மணி அளவில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளில் வலம் வர உள்ளாா். வைகாசி வசந்த உற்சவம் திருவிழா நடைபெறுவதால், உபய தங்கரதம் உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.