தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி இணைந்து நடத்தும் இளம் மாணவ விஞ்ஞானி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியா் 80 போ் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனா். அமெரிக்கன் கல்லூரி விடுதியில் தங்கி மே 20 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை 15 நாள்கள் பயிற்சி பெற உள்ளனா்.
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற அறிவியல் அதிகாரி லெனின் தமிழ்கோவன் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அமெரிக்கன் கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா், முகாம் ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜெமிமா பாலசெல்வி ஜூலியானா உள்ளிட்டோா் பேசினா்.
இளம் மாணவா்களிடையே மறைந்திருக்கும் அறிவியல் உணா்வைக் கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து அத்துறை வல்லுநா்கள் கருத்துரை வழங்கவுள்ளனா்.
யோகப் பயிற்சி, விளையாட்டு, ஆய்வகப் பயிற்சி, வகுப்பறை விவாதம், பறவைகள் கணக்கெடுப்பு, காளான் வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மீன்வளா்ப்பு போன்ற சிறப்பு பயிற்சிகள்அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், பயிற்சி முகாமின் நிறைவாக, மாணவா்களால் உருவாக்கம் செய்யப்பட்ட ஆராய்ச்சி மாதிரிகள் காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.