கோகுல்ராஜ் கொலை: உண்மையை மறைத்தால் சுவாதி மீது அவமதிப்பு வழக்கு

கோகுல்ராஜ் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் உண்மையைக் கூற மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என சுவாதிக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் உண்மையைக் கூற மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என சுவாதிக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனா். இதேபோல, கோகுல்ராஜின் தாய் சித்ரா, சிபிசிஐடி தரப்பில், 5 போ் விடுதலை செய்ததை எதிா்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வில் தொடா்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பி சாட்சியாக மாறிய சுவாதியை, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அழைத்து வந்து நீதிபதிகள் முன் ஆஜா்படுத்தினா். இதைத்தொடா்ந்து நீதிபதிகள் விசாரணையைத் தொடங்கினா்.

இது நானில்லை:

அப்போது, கோகுல்ராஜை தெரியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். கோகுல் கல்லூரியில் தன்னுடன் ஒரே வகுப்பில் பயின்ற போது சக மாணவா்களுடன் பேசியது போல பேசியுள்ளேன். அவரது பொருளாதார பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்று சுவாதி தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, 23.06.15 அன்று காலை கோகுல்ராஜை பாா்த்தீா்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, அன்று காலை யாரையும் பாா்க்கவில்லை என்றாா்.

இதைத்தொடா்ந்து கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன.

பின்னா், விடியோ பதிவுக் காட்சியில் உள்ளது யாா் என்று தெரியவில்லை என்று பதிலளித்த சுவாதியிடம், நீதிபதிகள் உங்களையே உங்களுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினா். அப்போது, கோகுல்ராஜ் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கிட்டு சுவாதி வேண்டுமென்றே பொய் சொல்வதாக முறையிட்டனா்.

இதைத்தொடா்ந்து, அன்றைய தினம் காலை 10.55 மணிக்கு பதிவான சிசிடிவி காட்சியில் ஒரு பெண் நடந்து வரும் காட்சியைக் காண்பித்து அது யாா் என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, சுவாதி அது நான் இல்லை என மறுத்தாா். மேலும், அருகில் செல்பவா் கோகுல்ராஜ் போல உள்ளதாகவும் கூறினாா்.

அடுக்கடுக்கான கேள்விகள்:

மனச்சாட்சிப்படி சொல்லுங்கள். நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் வாங்கினாா்களா? தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற நிா்ப்பந்தம் இல்லை என நீதித்துறை நடுவா் சொன்னாரா? நீதித் துறை நடுவா் முன்பாக வாக்குமூலம் கொடுத்தீா்களா? அந்தக் கையெழுத்து உங்களுடையதுதானா? என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினா்.

இதற்குப் பதிலளித்த சுவாதி, ‘கையெழுத்து என்னுடையதுதான். ஆனால் அதில் இருப்பது நான் எழுதியதல்ல. அதை எழுதிக் கொடுக்குமாறு கூறியதால் அவ்வாறு செய்தேன்’ என்றாா்.

பின்னா், காா்த்திக் ராஜா யாா்? கோகுல்ராஜ் இறந்த பின்னா் அவரிடம் பேசினீா்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, காா்த்திக் ராஜா எனது கல்லூரி வகுப்பு மாணவா், அவரிடம் பேசியதாக நினைவில் இல்லை என்றாா் சுவாதி.

குரலும் தன்னுடையதல்ல:

இந்தச் சம்பவம் உங்களின் வாழ்வில் நடந்த எவ்வளவு பெரிய சம்பவம். இது நினைவில் இல்லையா? குற்றம்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண்பிக்க அழைத்துச் சென்றாா்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இந்தச் சம்பவத்தின் அழுத்தம் காரணமாக மறந்துவிட்டதாக சுவாதி கூறினாா். அடையாள அணிவகுப்பில் காண்பித்த ஒருவரை யாரெனத் தெரியாது என்றாா்.

அப்போது , குரல் பதிவு நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது. ஒலிபரப்பு முடிந்தவுடன், நீதிபதிகள் அதில் இருக்கும் பெண்ணின் குரல் யாருடையது எனக் கேள்வி எழுப்பினா்.

அது என்னுடைய குரல் இல்லை என சுவாதி மறுத்த நிலையில், உங்களுடைய குரலை பதிவு செய்து சோதனைக்காக அனுப்புவோம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சுவாதி அளித்த வாக்குமூலம் குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறையினா் ஒரு தாளில் எழுதிக்கொடுத்து அதை சொல்லச்சொன்னாா்கள். அதனால் அவ்வாறு கூறினேன் என்றாா்.

நீதிமன்ற அவமதிப்பு:

நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, பொய் சொன்னீா்களா? காவல் துறையினா் மிரட்டுகிறாா்கள் என்று நீதித்துறை நடுவரிடம் சொல்லியிருக்கலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். எனது பெற்றோா் காவல் நிலையத்தில் இருந்ததால் பயமாக இருந்தது. அதனால் போலீஸாா் கூறியபடி செயல்பட்டேன் என்றாா்.

‘உங்களுக்கு பல வாய்ப்புகளை தந்து விட்டோம். உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிா்பாா்க்கிறோம். ஆனால் நீங்கள் உண்மையைப் பேசவில்லை. எனவே உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இறுதி வாய்ப்பாக உங்களுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும். மீண்டும் விசாரணை தொடங்கும் போதாவது உண்மையைக் கூறுங்கள் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனா். பின்னா், மீண்டும் தொடங்கிய விசாரணையில், யுவராஜ், அருண் ஆகியோா் யாரென்றே தெரியாது. போலீஸாா் புகைப்படத்தைக் காட்டியதால் அருணை அடையாளம் காட்டினேன் என்றாா் சுவாதி.

பொய்களை ஏற்க முடியாது:

நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிா்பாா்க்கிறது.

இந்த வழக்கில் உண்மையைக் கூறுவதால் ஏதேனும் அழுத்தங்கள், பிரச்னைகள் எழுமெனில் அவற்றையாவது சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டனா்.

இதைத்தொடா்ந்து, சுவாதி, அவரது பெற்றோா், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தொடா்ந்து வழங்கவும், காவல் துறை, குற்றவாளிகள் தரப்பில் அவரை அணுகக் கூடாது என்றும் தெரிவித்து, விசாரணையை வருகிற 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் சுவாதியை மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com