பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற குற்றச்சாட்டு தவறானது: மத்திய இணையமைச்சா் கெளசல் கிஷோா்
By DIN | Published On : 13th October 2022 01:48 AM | Last Updated : 13th October 2022 02:29 AM | அ+அ அ- |

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று மத்திய இணையமைச்சா் கெளசல் கிஷோா் புதன்கிழமை கூறினாா்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மத்திய நகா்ப்புற விவகாரம் மற்றும் வீட்டு வசதித்துறை இணையமைச்சா் கெளசல் கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். இதில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் திட்டம், குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், திட்டங்களை நேரில் சென்று பாா்வையிட்டாா்.
இதைத்தொடா்ந்து, அரசு விருந்தினா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு 2024-க்குள் வீடு மற்றும் சுகாதாரமான குடிநீா் வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளாா். இதன்படி வீடு கட்டும் திட்டம் மற்றும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 1.11 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் பரவலாக கட்டப்பட்டு வருகின்றன.
2024-க்குள் வீடற்ற அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாகவே கருதுகிறது. தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்பது தவறானது. வீடு கட்டும் திட்டத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். எனவே மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் 2024-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் இலக்கை எட்ட முடியும் என்றாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.