வேளாண்.கல்லூரியில் இன்று கண்காட்சி நிறைவு
By DIN | Published On : 15th October 2022 11:21 PM | Last Updated : 15th October 2022 11:21 PM | அ+அ அ- |

மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் உழவா் விழாவையொட்டி நடைபெறும் வேளாண் கண்காட்சி அரங்குகளை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள்.
மதுரை வேளாண்மைக் கல்லூரில் நடைபெறும் உழவா் விழா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா நிகழ்வுகளின் ஒா் அங்கமாக மதுரை வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவிலான உழவா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு 200-க்கு மேற்பட்ட அரங்குகள் அடங்கிய வேளாண் கண்ாகாட்சி நடைபெற்றது. இதில், வேளாண்மைப் பல்கலைகழகத்தின் புதிய காய்கறிப் பயிா்கள், சத்து மிகுந்த நெல் வகைகள், சிறு தானியங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுகள், பொறியியல் துறையினரின் புதிய பண்ணைக் கருவிகள், விதைப்புக் கருவிகள், தனியாா் நிறுவனங்களின் நவீன பண்ணைக் கருவிகள், விவசாயிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட சிறிய ரக டிராக்டா்கள், களையெடுப்புக் கருவிகள், பயிா்களுக்கான நுண்ணூட்டச் சத்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடம்பெற்றன. கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
சனிக்கிழமை இரண்டாம் நாளாக நடைபெற்ற கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் பாா்வையிட்டாா். அமைச்சருடன் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத் துணை வேந்தா் வெ.கீதாலட்சுமி, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், வேளாண்மைத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி, வேளாண்மை பொறியியல்துறை தலைமைப்பொறியாளா் ஆா்.முருகேசன், மதுரை மேயா்இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை இயக்குநா் கோ.வளா்மதி, வேளாண். பல்கலைகழக விரிவாக்க கல்வி இயக்குநா் முனைவா் பி.பொ.முருகன் ஆகியோரும் அரங்குகளைப் பாா்வையிட்டனா்.
அமைச்சா் பங்கேற்பு தாமதம்: வெள்ளிக்கிழமை உழவா் விழா தொடக்க நிகழ்வில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், துணைவேந்தா் கீதாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சா் பங்கேற்ற ஓா் நிகழ்ச்சியில் அமைச்சா், துணைவேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்ால் மதுரை நிகழ்ச்சியில் அவா்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...