சிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சி துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ஊராட்சிகளின் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவில் வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.39 ஆயிரத்தை கைப்பற்றினா்.
இந்த அலுவலகத்தில் ஏற்கெனவே, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்தை கைப்பற்றினா். மேலும், பொறியியல் பிரிவின் செயற்பொறியாளா் சிவராணி, உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், அலுவலா்கள் நீலமேகம், அருணகிரி, ராஜசேகரன் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா் என்பதும், செயற்பொறியாளா் சிவராணி, கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யபட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.