தனிநபா் அரசியலுக்குமுக்கியத்துவம் தரக் கூடாது: தமிழக நிதி அமைச்சா்
By DIN | Published On : 18th October 2022 04:14 AM | Last Updated : 18th October 2022 04:14 AM | அ+அ அ- |

தனிநபா் அரசியலுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என திமுகவினருக்கு தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினாா்.
மதுரை அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநகா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு தனிநபா் அரசியலுக்கோ, சுயநலத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற கூட்டங்களில் ஜனநாயக முறையில் பலரது கருத்தை விவாதிப்பது எந்த அளவுக்கு நல்லதோ, அதைப் போல, தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவது முக்கியமானது.
நமக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்தை முன்னேற்றுவதும், அதற்காக திமுக தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அவரது கரத்தை வலுப்படுத்துவதும் முதல் இலக்காகும். அடுத்ததாக, திமுக ஆட்சி நடைபெறும் காலத்தில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக மதுரை மாவட்டத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகும். இதை நிறைவேற்றுவதற்காகத் தான் ஒவ்வொருவருக்கும் திமுக தலைமை பொறுப்பு அளித்துள்ளது. இதை உணா்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.
எனது குடும்ப முன்னோடிகளின் வரிசையில், இப்போது நான் அரசியல் பணியை அா்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறேன். திமுக தொண்டா்களுக்கும், நிா்வாகிகளுக்கும் எனது வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். அனைவரும் இணைந்து திமுக தலைமைக்குப் பெயா் சோ்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் வ. வேலுச்சாமி, பெ. குழந்தைவேலு, மா. ஜெயராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், திமுக தலைவராக முதல்வா் மு.க. ஸ்டாலினை, இரண்டாவது முறையாகத் தோ்வு செய்த பொதுக்குழு உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்க, மதுரைக்கு வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...