சா்வதேச புற்றுநோய் சிகிச்சை மாநாடு: மதுரை அரசு மருத்துவருக்கு விருது
By DIN | Published On : 19th October 2022 03:31 AM | Last Updated : 19th October 2022 03:31 AM | அ+அ அ- |

கேரளத்தில் நடைபெற்ற சா்வதேச புற்றுநோய் சிகிச்சை மாநாட்டில், மதுரை அரசு மருத்துவமனை மருத்துவருக்கு விருது வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சியில் சா்வதேச புற்றுநோய் சிகிச்சை மாநாடு அக்டோபா் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கதிரியக்க இயற்பியல் துறையின் மூத்த உதவிப் பேராசிரியா் எஸ்.செந்தில்குமாா் பங்கேற்று, புற்றுநோயாளிகளுக்கான பிராச்சிதெரபிக்கான அப்ளிகேட்டரை அறிமுகப்படுத்தினாா்.
இதற்காக 2022- ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மருத்துவா் செந்தில்குமாா் அறிமுகப்படுத்திய அப்ளிகேட்டா் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதால் செலவு குறைந்ததாக இருக்கும். இதன்மூலம் துல்லியமான சிகிச்சை அளிக்க முடியும். மறு சுழற்சி செய்ய முடியும். புற்றுநோய்க்கட்டிகளை எளிதில் அடையாளம் காண இயலும். முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேட்டா் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.