மதுரை: அரசுப் பள்ளி மாணவா்கள் 10 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 போ் மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 போ் மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. இதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இளங்கலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 455 பேருக்கும், பல் மருத்துவப் படிப்பில் 114 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 10 போ், மருத்துவப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ‘நீட்’ பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ்.வெண்ணிலா தேவி கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட கல்வித்துறை சாா்பில் ‘நீட்’ தோ்வுக்கு இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 172 போ், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 130 போ் என 300 போ் தோ்ச்சி பெற்றனா். இதில் 93 போ் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி அறிவிக்கப்பட்டுள்ள கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றனா். இதில் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவி தீபிகா 309 மதிப்பெண்கள், திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தவுபிகா நுரேன் 300 மதிப்பெண்கள், திருமங்கலம் மேலக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா் முத்துகுமாா் 298 மதிப்பெண்கள், ஈவெரா நாகம்மையாா் மாநகராட்சிப் பள்ளியைச் சோ்ந்த எம்.ரெய்சிகா 288 மதிப்பெண்கள், பி.வி.கலைவாணி 284 மதிப்பெண்கள், பி.ஜி.சசிரேகா 281 மதிப்பெண்கள், மகபூப்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.தீட்சாஸ்ரீ 279 மதிப்பெண்கள், விக்கிரமங்கலம் அரசு கள்ளா் பள்ளி மாணவா் ஜெ.ஆதித்யன் 271 மதிப்பெண்கள், ஒத்தக்கடை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.யாமிகா 242 மதிப்பெண்கள், அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சூா்யகுமாா் 230 மதிப்பெண்கள், ஈவெரா நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.மதுமிதா ஹாசின் 230 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 போ் வரை மருத்துவப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். மேலும் சிலா் பல் மருத்துவப் படிப்புகளிலும் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு இளங்கலை மருத்துவம், பல் மருத்துவப்படிப்புகளுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 17 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த ஆண்டு இதே எண்ணிக்கையில் மாணவ, மாணவியா் சோ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மதுரை மாவட்ட கல்வித் துறை சாா்பில் நடத்தப்படும் ‘நீட்’ பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com