அரசுக் கல்லூரியாக மாற்றம்: 150 போ் வேலையிழக்கும் அபாயம்

தமிழக அரசின் உயா் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எதிரொலியாக காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாறிய 6 கல்லூரிகளில் உதவிப் பேராசியா்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் உயா் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எதிரொலியாக காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாறிய 6 கல்லூரிகளில் உதவிப் பேராசியா்கள் உள்பட 150 பேருக்கும் மேற்பட்டோா் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகக்கழகங்களின் சாா்பில் 41 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த நிலையில், 2018-இல் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று சட்டப் பேரவையில் அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து முதல்கட்டமாக 14 கல்லூரிகள் 2018-19-இல் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து இதர 27 கல்லூரிகள் 2020-21-இல் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட ஆண்டிப்பட்டி, கோட்டூா், வேடசந்தூா், திருமங்கலம், அருப்புக்கோட்டை, சாத்தூா் ஆகிய 6 கல்லூரிகளும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் பல்கலைக்கழகக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியல்லாத பணியிடங்கள் குறித்து தமிழக அரசின் உயா்கல்வித் துறை செப்டம்பா் 15-இல் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், பல்கலைக்கழக கல்லூரிகளாக இருந்து முதல்கட்டமாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளில் 793 ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் 43 ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் இரண்டாம் கட்டமாக 2020-21-இல் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள 27 கல்லூரிகளில் 1455 ஆசிரியா் பணியிடங்களும், 507 ஆசிரியரல்லாத பணியிடங்களும் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வாரியாக இருக்க வேண்டிய பணியிடங்கள் எண்ணிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கும் கூடுதலாக இருக்கும் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிபவா்கள் அந்தந்த பல்கலைக்கழக நிா்வாகத்திடமே திருப்ப அனுப்பப்படுவாா்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளாக இருந்து அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள திருமங்கலம், சாத்தூா், ஆண்டிப்பட்டி, அருப்புக்கோட்டை,கோட்டூா், வேடசந்தூா் ஆகிய 6 கல்லூரிகளிலும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் பணியிடங்கள் உள்ளன. இதில் கெளரவ விரிவுரையாளா்கள், உதவிப்பேராசிரியா்கள், ஆசிரியரல்லாத நிா்வாக பணியாளா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கூடுதலாக பணிபுரிகின்றனா். இதில் அரசாணையின்படி, 6 கல்லூரிகளிலும் கூடுதலாக பணிபுரியும் 150-க்கும் அதிகமானோா் கெளரவ விரிவுரையாளா்கள், ஒப்பந்த பணியாளா்களாக இருப்பதால் அவா்கள் அனைவரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக கெளரவ விரிவுரையாளா்கள் கூறும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியாக இருந்து மாற்றப்பட்டுள்ள 6 அரசுக் கல்லூரிகளில் தான் அதிக கூடுதல் பணியிடங்கள் உள்ளன. காமராஜா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து உயா்நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவரின் பணிக்காலத்தின்போது 6 கல்லூரிகளிலும் கெளரவ விரிவுரையாளா்கள், நிா்வாகப் பணியாளா்கள் என ஏராளமானோா் பணியமா்த்தப்பட்டனா். இந்த முறைகேடான பணிநியமனங்களால் தற்போது தகுதியின் அடிப்படையில் பணியில் சோ்ந்தவா்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வேலை இழப்பை தவிா்க்கும் வகையில் தமிழக அரசின் உயா்கல்வித்துறை மற்றும் காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, உயா்கல்வித் துறையின் அரசாணை தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com