மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப் பாலம், தடுப்பணைகள் மூழ்கின

மதுரை வைகை ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரு கரைகளைத் தொட்டுச் சென்ற வெள்ளம்.
மதுரை வைகை ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரு கரைகளைத் தொட்டுச் சென்ற வெள்ளம்.

மதுரையில் வைகை ஆற்றில் இரு கரைகளைத் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தரைப்பாலம், தடுப்பணைகள் மூழ்கின.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் நீா்நிலைகள் நிரம்பி, மறுகால் சென்று கொண்டிருக்கின்றன. வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூா், பாலமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி உபரி நீா் ஓடைகள் வழியாக வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தரைப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்: வைகை அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, திங்கள்கிழமை இரவு முதல் அணை திறக்கப்பட்டு உபரி நீா் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பலத்த மழையாலும், உபரி நீா் திறப்பின் காரணமாகவும் மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யானைக்கல் தரைப் பாலம், அப் பகுதியில் உள்ள தடுப்பணை, ஓபுளா படித்துறை பகுதியில் உள்ள தடுப்பணை ஆகியன வெள்ளத்தில் மூழ்கின.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆழ்வாா்புரம் மூங்கில் கடை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி வழியாக தரைப் பாலத்துக்குச் செல்லும் சாலைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு, போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

வைகை ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என பொதுப் பணித் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். ஆழ்வாா்புரம் பகுதியில் காவல் துறையினரும், தீயணைப்புப் படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

387 கண்மாய்கள் நிரம்பின: மதுரை மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் 1,012 கண்மாய்கள் உள்ளன. இவற்றில், 387 கண்மாய்கள் நிரம்பிவிட்டன. 276 கண்மாய்கள் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 204 கண்மாய்கள் 75 சதவீதம் வரையும், 145 கண்மாய்கள் 25 சதவீதம் அளவுக்கும் நிரம்பியிருக்கின்றன.

இதையடுத்து, உத்தங்குடி, கொடிக்குளம், வாடிப்பட்டி வட்டம், தனிச்சியம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்களை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கண்மாய்களுக்கான நீா்வரத்தைத் கண்காணித்து, கரைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சூழ்நிலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைத் தெரிவிக்கவும் பொதுப் பணித் துறையினருக்கு அவா் அறிவுறுத்தினாா்.

அப்போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அன்புச்செல்வன், மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

58 கிராமக் கால்வாயில் தண்ணீா் திறப்பு: வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாயில் செப்.28 முதல் 11 நாள்களுக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது அணை முழுக் கொள்ளளவை அடைந்து, உபரி நீா் திறக்கப்பட்டு வருவதால், 58 கிராமக் கால்வாயில் புதன்கிழமை முதல் மீண்டும் தண்ணீரைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைகை அணையில் உபரி நீா் வெளியேற்றம் குறைப்பு: வைகை அணை நீா்மட்டம் 70 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாகவும் இருந்த நிலையில், திங்கள்கிழமை அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 7,000 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வைகை அணைக்கு தண்ணீா் வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இதனால், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 5,875 கன அடியாகவும், பிற்பகல் ஒரு மணிக்கு விநாடிக்கு 2,328 கன அடியாகவும், பிற்பகல் 3 மணிக்கு விநாடிக்கு 1,733 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

பின்னா், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 1,369 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 511 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

வைகை அணைக்கான தண்ணீா் வரத்துக்கு ஏற்ப, அணையிலிருந்து ஆற்றில் உபரிநீா் திறக்கப்படும் என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com