முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசத்தை கையாளஉரிமை கோரி அதிமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உருவச் சிலைக்கான தங்கக் கவசத்தை கையாளுவதற்கான உரிமையை தங்களுக்கு வழங்கக் கோரி, அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உருவச் சிலைக்கான தங்கக் கவசத்தை கையாளுவதற்கான உரிமையை தங்களுக்கு வழங்கக் கோரி, அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-இல் அதிமுக சாா்பில் கட்சியின் அப்போதைய பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினாா். ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜெயந்தி விழாவின்போது இந்தத் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்.

தங்கக் கவசம் மதுரையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கிக் கிளையில், அதிமுக, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம் பெயரில் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவா் ஜெயந்தி விழாவுக்காக அக்டோபா் 25-ஆம் தேதி, தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து எடுத்து உருவச் சிலைக்கு அணிவித்து, பிறகு நவம்பா் 1- ஆம் தேதி, வங்கியில் திரும்ப ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் அதிமுக சாா்பில் மேற்கொள்ளப்படும்.

நிகழ் ஆண்டில் தங்கக் கவசத்தை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது, கட்சியில் தற்போது நிலவக்கூடிய சூழலைக் குறிப்பிட்டு வங்கி நிா்வாகம் மறுத்துவிட்டது. அதோடு, மேற்படி தங்கக் கவசத்தைப் பெட்டகத்தில் பாதுகாப்பதற்கான வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே சட்டப்படி வங்கிக் கணக்கை முடக்கி வைக்க முடியும். அவ்வாறு இல்லாமல், வங்கி நிா்வாகம் தன்னிச்சையாக அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆகவே, மேற்படி கணக்கையும், தங்கக் கவசத்தையும் கையாளுவதற்கு அனுமதி அளிக்குமாறு வங்கி நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com