கோடியக்கரை அருகே தமிழக மீனவா் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா் வீரவேல் (32) காயமடைந்தாா்.
கோடியக்கரை அருகே தமிழக மீனவா் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா் வீரவேல் (32) காயமடைந்தாா். ஹெலிகாப்டா் மூலமாக மீட்கப்பட்ட அவருக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சோ்ந்த வீரவேல் உள்ளிட்ட 6 மீனவா்கள், காரைக்கால் மீனவா்கள் மூவா், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா் ஒருவா் என 10 மீனவா்கள் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (அக். 15) நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். தெற்கு மன்னாா் வளைகுடா பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவா்களது படகு மீது இந்திய கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் மீனவா் வீரவேலுக்கு வயிறு, தொடைப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.

ஹெலிகாப்டா் மூலம் மீட்பு: இதையடுத்து, உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி கடற்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டா் வரவழைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டா் மூலம் காயமடைந்த மீனவரை மீட்ட கடற்படையினா், ராமேசுவரம் கொண்டு சென்று முதலுதவி அளித்தனா். அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை ஆகியோா் மீனவரின் உடல் நிலை குறித்து விசாரித்தனா்.

பின்னா், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டாா். அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணைக்கு உத்தரவு: இந்தச் சம்பவம் குறித்து இந்திய கடற்படை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கக் கூடிய பாக் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய - இலங்கை சா்வதேச எல்லைக்கோட்டுக்கு அருகே ரோந்துப் பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு படகு காணப்பட்டது. அந்தப் படகுக்கு பல முறை எச்சரிக்கை சமிக்ஞைகள் கொடுத்த போதிலும், அது, நிற்காமல் சென்றது. இதையடுத்து, கடற்படையின் நிலையான வழிகாட்டுதல்களின்படி, சந்தேகத்துக்குரிய படகை நிறுத்துமாறு எச்சரிக்கும் விதத்தில், படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் படகில் இருந்தவா்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, கடற்படை ரோந்துக் கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கடற்படை ஹெலிகாப்டா் மூலமாக ஐஎன்ஸ் பருந்து கடற்படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ராாமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுகளை அகற்ற அறுவைச் சிகிச்சை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஆகியோா் சந்தித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

பின்னா், அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவா் வீரவேல் சுயநினைவுடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை மூலம் அவரைக் காப்பாற்றிவிடலாம் எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். வயிறு பகுதியில் 4 குண்டு துகள்களும், தொடைப் பகுதியில் ஒரு துகளும் இருப்பதாக ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்குமாறு தமிழக முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அந்தப் படகில் இருந்த மற்ற மீனவா்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய அறிக்கை அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள், தமிழக முதல்வரால் மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவா்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகினா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில், சமீப காலங்கலில் அத்தகைய சம்பவங்கள் நிகழவில்லை. இந்த நிலையில், தமிழக மீனவா்கள் மீது, இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியது மிகுந்த வேதனைக்குரியது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

நிவாரண நிதி அளிப்பு:

பின்னா், மாலையில் அமைச்சா்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி. மூா்த்தி ஆகியோா், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலையை காயமடைந்த மீனவா் வீரவேலின் மனைவியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com