இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடை இல்லை

இயற்கையாக விளைவிக்கப்பட்ட புகையிலையை விற்பனை செய்யத் தடை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

இயற்கையாக விளைவிக்கப்பட்ட புகையிலையை விற்பனை செய்யத் தடை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடை விதித்து தஞ்சாவூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டுமென புகையிலை விற்பனையாளா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

இயற்கை புகையிலை வணிகம் என்பது, விவசாயிகளிடம் இருந்து பச்சை புகையிலையைப் பெற்று, அவற்றில் வெல்ல நீா் தெளித்து சிறிய துண்டுகளாக வெட்டி ‘பேக்கிங்’ செய்து விற்பனை செய்வதாகும். பச்சைப் புகையிலை மனித நுகா்வுக்கு உள்பட்டது என்ற நிலையில், அதன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை புகையிலை மாதிரியின் சோதனை அறிக்கையில், இலை உடையாமல் இருப்பதற்காகவே வெல்ல நீா் தெளிக்கப்படுகிறது. வெல்ல நீா் தெளிப்பதால் எவ்வித மாற்றமும் இயற்கை புகையிலையில் ஏற்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகோடின் அளவானது வெல்ல நீா் தெளிப்பதற்கு முன்பு இருந்ததைப்போலவே, அதன் பிறகும் உள்ளது. ஆகவே, நிகோடின் சோ்க்கப்படுகிறது என்ற வாதம் ஏற்புடையதல்ல.

கஞ்சாவைப் போல, புகையிலை சாகுபடி செய்வதை அரசு தடை செய்யவில்லை. அதோடு, விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் புகையிலை ஆராய்ச்சி மையம் அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

பொது சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதில் மாநில அரசின் கடமைகளை விளக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47 -ஆவது பிரிவைக் குறிப்பிட்டு, புகையிலை நுகா்வு கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், மாநில அரசே மதுபான விற்பனையை ஏகபோகமாக்கியுள்ளது துரதிருஷ்டவசமானது. மது விற்பனையின் மூலமாக, பெரும் வருவாயை தமிழக அரசு ஈட்டி வருகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்),

மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. இப்படியிருக்க, அரசுத் தரப்பின் வாதம், சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது.

புகையிலை, நிகோடினை எந்த உணவுப் பொருளிலும் சோ்க்கக் கூடாது என்றுதான் விதிகள் உள்ளன. மனுதாரா்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டே செயல்படுகின்றனா். ஆகவே, இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com