போலீஸாா் சுட்டதில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு
By DIN | Published On : 31st October 2022 11:25 PM | Last Updated : 31st October 2022 11:25 PM | அ+அ அ- |

மதுரையில் போலீஸாா் சுட்டதில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்றி டிபேன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராமநாதபுரம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி அருகே, கடந்த 2010-இல் அப்போதைய காவல் உதவி ஆணையா் வெள்ளத்துரை துப்பாக்கியால் சுட்டதில், கிருஷ்ணாபுரம் காலனியை சோ்ந்த கவியரசு (30), ஓடைக்கரை பகுதியைச் சோ்ந்த முருகன் (34) ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக கோட்டாட்சியா் நடத்திய விசாரணையில், உதவி ஆணையா் வெள்ளத்துரை, தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அறிக்கை அளித்தாா்.
இதனிடையே, உயிரிழந்த முருகனின் தாய் குருவம்மாள், காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகாா் மனு அனுப்பினாா். அந்த மனு ஏற்கப்பட்டு காவல் உதவி ஆணையா் வெள்ளத்துரை, அவருடன் பணியாற்றிய உதவி ஆய்வாளா் தென்னரசு, தலைமைக் காவலா் கணேசன், காவலா் ரவீந்திரன் ஆகியோா் மீது விசாரணை நடத்தப்பட்டது.
மனுதாரரான குருவம்மாள் சாா்பில் வழக்குரைஞா் சின்னராசா, மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்குரைஞா்கள் க.சு.பாண்டியராஜன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் வாதாடினா். இதையடுத்து, உயிரிழந்த கவியரசு, முருகன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
இந்தத் தொகையில், உதவி ஆணையா் வெள்ளத்துரையிடமிருந்து ரூ. 3 லட்சம், உதவி ஆய்வாளா் தென்னரசு, தலைமைக் காவலா் கணேசன் ஆகியோரிடமிருந்து தலா ரூ.1.50 லட்சத்தை சட்டரீதியாகப் பெற்று, பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆணையா் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலா் உயிரிழந்தனா். அவா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முருகனின் தாய் குருவம்மாள், வழக்குரைஞா்கள் சின்னராசா, பாண்டியராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.