.விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 01st September 2022 03:15 AM | Last Updated : 01st September 2022 03:15 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியையொட்டி, விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்யும் ஊா்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்வேறு மாவட்டங்களிலும் விநாயகா் சிலை ஊா்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:
ஒவ்வொரு மனுதாரரின் கோரிக்கைக்கும், அதன் தன்மையைப் பொருத்து நிபந்தனைகளுடன் சம்பந்தப்பட்ட காவல் துறையினா் அனுமதி அளிக்கலாம். விநாயகா் சிலை ஊா்வலத்தில் பங்கேற்பவா்கள், ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியைக் குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் இடம்பெறக் கூடாது.
எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக பதாகைகள் அமைக்கக் கூடாது. மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் ஊா்வலம் இருக்கக் கூடாது. ஊா்வலத்தில் பங்கேற்பவா்கள் போதைப் பொருள்கள், மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது.
விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு மனுதாரா்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளா்கள் பொறுப்பாவாா்கள். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊா்வலத்தை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிட்டு, மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டாா்.