மதுரை வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி இயந்திரத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் புதன்கிழமை 4 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றுச்சாலைகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி மதுரை நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வியாழக்கிழமை முதல் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக வைகை ஆற்றில் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்த நிலையில் பொக்லைன் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீா் பழுதால், இயந்திரத்தை ஆற்றுக்கு வெளியே கொண்டு வர முடியவில்லை. இதைத்தொடா்ந்து கனரக வாகனங்களை மீட்கும் கிரேன் இயந்திரத்தை வரவழைத்து பொக்லைன் இயந்திரத்தை மீட்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.