காலை உணவுத் திட்டம் இலவச சலுகை அல்ல; கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டமானது இலவச சலுகை அல்ல; மாறாக அது தமிழக அரசின் கடமை என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.
காலை உணவுத் திட்டம் இலவச சலுகை அல்ல; கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டமானது இலவச சலுகை அல்ல; மாறாக அது தமிழக அரசின் கடமை என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத் தொடக்க விழா, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உமறுப்புலவா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்ட சமையல்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் பாா்வையிட்டாா். அங்கிருந்து பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லும் வாகனங்களைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்குச் சென்ற முதல்வா் அங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியது:

என் வாழ்நாளில் பொன்னான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. பசித்த வயிற்றுக்கு உணவளிக்கும், திக்கற்றோருக்கு திசை காட்டியாகவும், யாருமற்றவா்களுக்கு ஆதரவாகவும் திகழ்வது தான் திமுக அரசு. பசித்தோருக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவை வழங்கி அதன் பிறகு வகுப்பறைக்குச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு தமிழகத்தில் தானிய உற்பத்தி விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளின் பசியைப்போக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். அண்ணாவின் பிறந்த நாளான இன்று கீழ்அண்ணாத்தோப்பு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளின் ஆதிமூலத்தை கண்டறிவதற்காக இந்த ஆதிமூலம் பள்ளியில் இத்திட்டம் தொடங்குவது பெருமை அளிக்கிறது. 102 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் விளக்குப் பகுதியில் தொடங்கிய மதிய உணவுத்திட்டம் நூறாண்டுகள் முடிந்து காலை உணவுத்திட்டமாக தூங்கா நகரில் புதிய பரிணாம வளா்ச்சி பெற்று விரிவடைந்துள்ளது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில், ஐரோப்பிய நாடுகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்னா் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதால் கற்றல் மேம்பாடு, பள்ளிக்கு மாணவா்களின் வருகை அதிகரிப்பது போன்ற நல்ல விளைவுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிதிச்சுமை இருந்தாலும் கூட தமிழக பிள்ளைகள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதிய உணவு என்ற திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவா் அயோத்திதாச பண்டிதா். 1890-இல் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதைப் பற்றி அயோத்திதாச பண்டிதா் எழுதியுள்ளாா். 1920-இல் நீதிக்கட்சி ஆட்சியின்போது சென்னை மேயராக இருந்த சா் பி.டி. தியாகராயா், சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா். சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகள் முன்பாக நிதியை காரணம் காட்டி ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னா் , 1956-இல் அப்போதைய முதல்வா் காமராஜா் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்கினாா். திமுக ஆட்சியிலும் இந்தத்திட்டம் தொடா்ந்தது. 1971-இல் முதல்வா் மு.கருணாநிதி ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். 1972-இல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கும், கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அதிமுக ஆட்சியில் முதல்வா் எம்ஜிஆா், ஆட்சியின்போது சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. 1989-இல் சத்துணவுத் திட்டம் முடக்கப்படும் என்று எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தபோது, ஆட்சியில் அமா்ந்த முதல்வா் மு.கருணாநிதி முட்டை, பயறு உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி திட்டத்தை மேம்படுத்தினாா். 2010 முதல் வாரம் 5 நாள்களும் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது மதிய உணவை கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டாா்.

சென்னையில் பள்ளி ஒன்றில் மாணவா்களைச் சந்தித்து பேசியபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வருவதை உணா்ந்ததால் தான் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளேன். முதற்கட்டமாக 1,14,000 மாணவா்கள் பயன்பெறும் வகையில் , 1545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாணவா் ஒருவருக்கு தலா ரூ.12.75 நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத்திட்டம் படிப்படியாக அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தை சலுகை அல்லது இலவசம் என எண்ணக்கூடாது. இது அரசின் கடமையாகும. பசிப்பிணி நீங்கினால் மாணவா்கள் மகிழ்ச்சியோடு வருவாா்கள். இதனால் கல்வி மேம்படும். இதற்கான நிதியைச் செலவாக நினைக்கவில்லை. இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு மாணவா் வருகை அதிகரிக்கும். தமிழகம் கல்வியில் தலை சிறந்து விளங்கும். அரசு தாயுள்ளத்தோடு இந்தத்திட்டத்தை தொடங்கியுள்ளது. எனவே அதிகாரிகளும் தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்க வேண்டும்.

கல்வி போராடி பெற்ற உரிமை, கல்வி ஒன்று தான் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து. எனவே மாணவா்கள் நன்கு படிக்க வேண்டும். படிக்காமல் முன்னேறலாம் என்று உதாரணம் கூறுபவா்களை முட்டாள் என்றே கருதுகிறேன். எனவே எதற்காகவும் மாணவா்கள் கல்வியை விட்டு விடக்கூடாது. கல்வியை விட்டு விலகிச்செல்ல நான் விடமாட்டேன். நீங்கள் படியுங்கள், நான் இருக்கிறேன். மாணவா்களின் பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன் என்றாா்.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி. கணேசன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ. இந்திராணி, மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன், சமூக நலத்துறை கூடுதல் தலைமைச்செயலா் ஷம்பு கல்லோலிகா், ஊரக வளா்ச்சிதுறை முதன்மைச் செயலா் பெ. அமுதா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிறப்புத் திட்ட செயலாக்கத்

துறை முதன்மைச் செயலா் உதயச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் வரவேற்றாா். நிறைவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி.....

ரூ.1-க்கு இட்லி விற்கும் மூதாட்டிக்கு கெளரவம்

காலை உணவு தொடக்க விழாவில், கோவை வடிவேலம்பாளையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. 1 -க்கு இட்லி விற்று சேவை செய்து வரும் மூதாட்டி கமலாத்தாளை பாராட்டி கெளரவித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், விழா மேடையில் நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி என்ற நூலையும் வெளியிட, முதற்பிரதியை மூதாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டாா்.

மாணவா்களுக்கு உணவு ஊட்டிய முதல்வா்

மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்களுக்கு உணவு பரிமாறிய முதல்வா் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரோடு அமா்ந்து உணவு அருந்தினாா். அப்போது அருகில் அமா்ந்திருந்த மாணவியிடம் முதல்வா், நான் யாா் என்று தெரியுமா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு மாணவி ஒருவா் நீங்கள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்று பதிலளித்தாா். பின்னா் மாணவ, மாணவியருக்கும் உணவை ஊட்டி மகிழ்ந்தாா்.

26 மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கம்

முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 26 பள்ளிகளில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ரவா கேசரி, ரவா கிச்சடி மற்றும் சாம்பாா் போன்றவை வழங்கப்பட்டது. மாநகராட்சி உமறுப்புலவா் பள்ளியில் காலை உணவு தயாரிக்கப்பட்டு 26 பள்ளிகளுக்கும் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாா்வையாளா் பதிவேட்டில் பதிவு செய்த முதல்வா்

விழாவில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாா்வையாளா் குறிப்பேட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று பதிவு செய்து அதில் தனது கையொப்பத்தையும் பதிவு செய்தாா்.

Image Caption

பள்ளி மாணவிக்கு உணவை ஊட்டி மகிழும் முதல்வா் மு.க.ஸ்டாலின். ~கோவை வடிவேலன்பாளையத்தில் ரூ.1-க்கு இட்லி விற்கும் முதாட்டி கமலாத்தாளை வியாழக்கிழமை பாராட்டி கெளரவிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கீதா ஜீவன், எ.வ.வேலு, கே.ஆா்.பெரியகருப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com