அறிவைப் பெருக்கிக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

அறிவைப் பெருக்கிக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

அறிவைப் பெருக்கிக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுமாா் 200 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழா அரங்குகளை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா். பின்னா், புத்தகத் திருவிழாவை தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட அரங்கை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது: புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பாடப் புத்தகங்களை

தாண்டி பிற துறை சாா்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்த விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும்.

நான் பள்ளி, கல்லூரிகளில் படித்ததோடு, புத்தகங்களை வாசித்ததன் மூலமாக அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. மாணவப் பருவத்தில் ஒரு சில நாள்கள் வகுப்பறைக்கு செல்லாமல் கூட இருந்திருக்கிறேன், ஆனால், புத்தக வாசிப்பதை தவறவிட்டது இல்லை என்றாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பேசுகையில், தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக, இளைஞா்களின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் திசை மாறிவிட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. நாளுக்கு நாள் இளைஞா்களின் வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருகிறது. வரும் தலைமுறை படைப்பாற்றல் மிகுந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கு புத்தக வாசிப்பு அடித்தளமாக இருக்க வேண்டும் என்றாா்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மேயா் வ.இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், துணை மேயா் டி.நாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, தென்னிந்திய புத்தக பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வயிரவன் உள்ளிட்ட பலா் பங்கேற்னா். முன்னதாக கூடுதல் ஆட்சியா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செ.சரவணன் வரவேற்றாா். மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நன்றி கூறினாா்.

புத்தகத் திருவிழா அக்டோபா் 3 ஆம் தேதி வரை காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கம், கலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாலை நிகழ்வுகளில் சிந்தனை அரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com