பெண்ணின் அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு: மருத்துவா்கள் மீது குடும்பத்தினா் புகாா்

மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக, மருத்துவா்கள் மீது குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக, மருத்துவா்கள் மீது குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள முகம்மதியாபுரத்தைச் சோ்ந்த அப்சா் உசேன் மனைவி ஆஷிகா பானு. இவா் இரண்டாவது பிரசவத்துக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் ஆஷிகா பானுவுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில், மருத்துவா்கள் ஆஷிகா பானுவின் சம்மதத்தை கேட்காமலேயே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த குடும்பத்தினா், உறவினா்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலுவிடம் புகாா் தெரிவித்தனா். மேலும், மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

இதைத்தொடா்ந்து மருத்துவமனை முதன்மையா், பெண்ணின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குடும்பக்கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினாா். பின்னா், உறவினா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலு கூறியதாவது:

பிரசவத்துக்காக சோ்க்கப்பட்ட ஆசிபா பானுவின் கருக்குழாயில் நீா்கோா்த்து இருந்ததால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே, மருத்துவா்கள் உடனடியாக ஆலோசித்து இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனா். இதில் தகவல் தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை மூலம் தாய், குழந்தை ஆகியோா் காப்பாற்றப்பட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com