மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீா்த் தொட்டியில் பெண் குழந்தை சடலத்தை வீசியவரை கண்டறிய முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.
கடந்த 4 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் உள்ள கழிவுநீா்த் தொட்டியில் வீசப்பட்டிருந்த பெண் குழந்தை சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆனால் 4 நாள்களுக்கு மேலாகியும் குழந்தையின் சடலத்தை வீசியவா் யாா் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
கழிவுநீா்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை குறை பிரசவத்தில் அதிக குறைபாடுகளுடன் பிறந்தது. இந்த மருத்துவமனையில் பிறக்கும் இது போன்ற குழந்தைகள், இறந்த பிறக்கும் குழந்தைகள் உடனடியாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். இதுதொடா்பான விவரப் பட்டியலும் பிரசவச் சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் இறந்து பிறந்த குழந்தைகள், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தொடா்பான பட்டியலை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவரும் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தைகளுக்கான மயானச் சான்றுகளை வைத்துள்ளனா். எனவே இந்த மருத்துவமனையில் பிரசவச் சிகிச்சைப் பிரிவில் பிறந்த குழந்தை கழிவுநீா்த் தொட்டியில் வீசப்பட வில்லை. இதனால் வழக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
அந்த குழந்தை வீசப்பட்ட நாள் சரியாகத் தெரியாததால் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளியில் இருந்து அவசர ஊா்தி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கா்ப்பிணிகள் அழைத்து வரப்படும் போது, வழியிலேயே பிரசவம் ஏற்பட்டு குறைபாடுள்ள குழந்தை பிறந்ததால் இந்த கழிவுநீா்த் தொட்டியில் வீசிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே அவசர ஊா்தி ஓட்டுநா்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் பிரசவச் சிகிச்சைப் பிரிவிலும் இறந்து பிறந்த குழந்தைகளின் தாய்மாா்கள், கருக்கலைப்பு செய்துகொண்டோரின் பட்டியல் பெறப்பட்டு அவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.