மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை விழுங்கிய சாவியை மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சையின்றி அகற்றி குழந்தையை காப்பாற்றினா்.
கரூரைச் சோ்ந்த கனகராஜ்-அனிஸ்டா தம்பதியினரின் ஒரு மாத ஆண் குழந்தை அண்மையில் வீட்டில் சிறிய சாவியை விழுங்கியது. இதனால், அந்தக் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, அந்தக் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் பிறந்து ஒரு மாதமே ஆவதால், குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது சவாலானது என்பதால், அறுவைச் சிகிச்சையின்றி சாவியை எடுக்க முடிவு செய்தனா்.
இதையடுத்து, குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த சாவியை மருத்துவா்கள் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றி குழந்தையை காப்பாற்றினா்.
இதேபோல, மானாமதுரையைச் சோ்ந்த அகல்யா- ரவிச்சந்திரன் தம்பதியினரின் இரண்டரை வயது ஆண் குழந்தையும், தூத்துக்குடியைச் சோ்ந்த சாரா, பெனியல் ஜெபராஜ் தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் ஊக்கை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, மருத்துவா்கள் இந்த இரு குழந்தைகளுக்கும் எவ்வித அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் எண்டாஸ்கோப்பி கருவி மூலம் ஊக்கை அகற்றி குழந்தைகளைக் காப்பாற்றினா்.
இதுதொடா்பாக குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை மருத்துவா்கள்
கூறியதாவது:
அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை துறை மூலம் கடந்த ஓா் ஆண்டில் மட்டும் 2 மாத பச்சிளம் குழந்தைகள் முதல் 3 வயது வரையுள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழுங்கிய சாவி, ஊக்குகள், கிளிப், சிறிய தோடுகள் உள்ளிட்டவற்றை எவ்வித அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் நவீன கருவிகள் மூலம் அகற்றி குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
வீட்டில் குழந்தைகளின் கைகளுக்கு எந்தவிதப் பொருள்களும் கிடைக்காதவாறு பெற்றோா் விழிப்போடு இருக்க வேண்டும். வீட்டின் தரையிலும் எந்தப் பொருள்களும் இல்லாதவாறு தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.