முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் நியமன வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், ஆசிரியா் தோ்வாணையத் தலைவா், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணையத்தின் சாா்பில் கடந்த 2017-இல் 387 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற இந்தத் தோ்வில் தவறான வினா, விடை இடம் பெற்ாகக் கூறி, சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தவறாகக் கேட்கப்பட்ட வினா எண்கள் 14, 43, 63, 72 ஆகியவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதை எதிா்த்து ஆசிரியா் தோ்வு வாரியம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்வு எழுதியவா்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதுடன், அவா்களது சான்றிதழ்களைச் சரிபாா்த்து பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தாரணி என்பவரின் மனுவையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆசிரியா் தோ்வாணையத்துக்கு எதிராக தாரணி சீராய்வு மனு தாக்கல் செய்தாா்.
இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும் என உத்தரவிட்டாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தனக்கு பணி வழங்கப்படவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாரணி மீண்டும் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொருத்தவரை நீதிமன்ற உத்தரவை ஆசிரியா் தோ்வாணையமும், பள்ளிக் கல்வித் துறையும் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே, ஆசிரியா் தோ்வாணையத்தின் தலைவா், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.